ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு இனி கட்டணங்கள் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்ய ஆர்டிஜிஎஸ் ( Real Time Gross Settlement - RTGS ), ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் தேசிய மின்னணு நிதி மாற்றல் (NEFT) ஆகிய சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இதில், ஆர்டிஜிஸ் மூலம் 2 லட்சத்துக்கு அதிகமான தொகையை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதில் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை பணப் பரிவர்த்தனைக்கு 5 ரூபாயும், 5 லட்சத்துக்கு மேல் செய்யும் பணப்பரிவர்த்தனைக்கு 10 ரூபாயும் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
அதே போல் நெஃப்ட் மூலம் தேசிய குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். இதில் ரூ.10,000 வரையிலான பணப்பரிவர்த்தனைக்கு ஒரு ரூபாயும், ரூ.10,000-க்கு மேல் இருந்து ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு 2 ரூபாயும், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்து ரூ. 2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைக்கு 3 ரூபாயும், ரூ. 2 லட்சத்துக்கு மேல் 5 ரூபாயும், இதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கிகளில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், ஆர்டிஜிஎஸ் ( Real Time Gross Settlement - RTGS ) மற்றும் தேசிய மின்னணு நிதி மாற்றல் (NEFT) போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு இனி கட்டணங்கள் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.